Friday 3 August 2012

ஈழத்து மண்ணிலிருந்து...


       
         ஈழத்து மண்ணிலிருந்து தமிழகம் வந்த என்

நண்பனை, 'நலமா?' எனக் கேட்டபோது,

அவன் அளித்த பதில்.....



             --    மு.இளவரசு, (Reader in Kavithai Chittu)

                  சம்பளக் கணக்கு அலுவலகம்,

                  (கிழக்கு), சென்னை-5.




"தெற்கிலும் உதிக்கட்டும் சூரியன்"

     (1990 நவம்பர்-ல், கவிதைச் சிட்டு இதழில்

                 பிரசுரிக்கப்படத் தரப்பட்டது)




நாளைய கனவுகள் இன்றே களைந்தன!

நேற்றைய உணர்வுகள் நின்று சிதைந்தன!

காக்கி உடைகளில் துப்பாக்கி அன்னியர்...

தாண்டவ(ம்)  ஆடினர்?




ஒரு பெரும் நகரம் மரணமடைந்தது!

வாழ்கையின் முடிவே மரணம் என்போம்!

எமக்கோ? மரணமே

வாழ்க்கையின் ஆரம்பமாய் உள்ளது!




பள்ளியிலிருந்து வீடு வருகையில்,

படம் பார்த்துச் செல்லுகையில்,

சந்தையில் இருந்து திரும்பும் போது,

மருத்துவம் பார்க்கப் புறப்படும் போது...




பாதி வழியிலேயே... எங்களில் எவரும்,

சுடப்பட்டிருக்கலாம்!

பெண்களில் யாரும்... சிதைந்து வேகலாம்!

என்ன நிகழ்ந்தது?




எமது நகரம் எரிக்கப்பட்டது!

எமது மக்கள் முகங்களை இழந்தனர்!

எனது நிலம், எனது காற்று...

எங்கு காணினும் அன்னியனின் ஆக்கிரமிப்பு!




அடக்குமுறைக்கு அடிப் பணிவதுதான்

அரசியல் அறமா?

அப்படியாயின் அதை யாம்...

எதிர்த்(து) அழிப்போம்!




எவர் இதை எமக்கு மறுத்தற் கூடும்?

போராடுவதே எமக்கு,

வாழ்வென ஆனால்...

மரணமடைவதும் மகத்துவம் தானே?




ஏனென்றால் மரணத்தில்தானே,

எமக்கு வாழ்கையே உயிர்த்தெழுகிறது!

மறுபடியும் ஓர் சூரிய உதயம்...

          ஆனால் இம்முறை தெற்குத் திசையிலே!

No comments:

Post a Comment