Saturday, 4 May 2013

அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?

                                                
 Photos:  PrakasH MunnA



              அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?


அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் அங்குமிங்கும்...
குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரள்கள்,
திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனுள்,
பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!


              
அண்டம் விட்டு அண்டம் ஆயும்,
அறிவியல்... ஒர்நாள் –
கண்டம் விட்டு கண்டம் பாயும்?
அகிலம் கருகி... சாம்பலாகும்!



மானுடம் பிழைக்க –
பயிர் வயல்கள்,
செடி கொடிகள்...
பூத்துப் புன்னகைக்கின்றன!



ஆனால் –
பூச்சிக்கொல்லி மருந்துகளால்,
தானியங்கள், காய்கள், கனிகள்;
நஞ்சுகளாகின்றன!



அதனால்...
அறிவியல் ஒரு
அரியும் வெங்காயம்!
மருந்தும் ஆகின்றது!
எரிச்சலும் தருகின்றது!



அறிவியல்...
சூரிய மண்டலம்கடந்து...
சுழலவும் செய்கின்றது!
பால்வெளி வீதிக்குள்நுழைந்து...
பயணமும் தொடர்கின்றது!



அதனால்...
உலகம் சுருங்குகின்றது!
பிற கிரகங்களின்
இரகசியங்களைத்
தெரியவும் உதவுகின்றது!



ஆனால்...
அழிவைச் செய்திடும்
கலகக் காரர்களுக்கு–
வேட்டைநாயும் ஆகின்றது!



அறிவியல் இரவுகளில் …
ஒளிக் கற்றைகளாகி
அகிலத்துக்குள்
இருட்டைக் களைகின்றது!



உலகோர் தேவைகளை...
ஆலைகளாகிப்
பூர்த்தி செய்கின்றது!



ஆனால்...
ஓசோன் படலத்தை
ஓட்டை ஆக்குகின்றது!



சூரியனின்
புற ஊதாக் கதிர்களை
உட்புக வைத்து...



பூமிச் சோலைகளின்–
பரப்புக்களைச் சுருக்கி,
பாலைவனங்களாய்...
மா[ற்]றவும் செய்கின்றது!



அறிவியல்...
அற்புத கணனிகளாகி,
இயந்திர மானுடமாகி,
விந்தைகளைப் புரிகின்றது!



ஆனால்... இன்றைய
இளைய சமுதாயத்தினரை,
கல்வி முடித்தும் –
வேலையில்லா...
பட்டதாரிகளாக்குகின்றது!



புவனத்தை –
போர்களங்கள்,
ஆக்குகின்றது!



பருவ வயதினர்...
கைச் செல்போன்களாகி,
குடும்பத் தந்தையரின் வருமானம் –
சேமிப்புக்குள் உயரவிடாமல்...



உதிரம் கசிய...
உழைப்போர்
வியர்வைத் துளிகளே போல்...



உலக பொருளாதாரத்தை
தினசரி –
விரயம் செய்கின்றது!



இதனால்...
ஒரு பெண் [வேலையில்லா பட்டதாரி!]
கவிதை எழுதுகிறார்...?



*வளர்ச்சி உண்டு! ஆற்றல் உண்டு !
வனப்பும் உண்டு!



ஆனால்...
மணமே இல்லை!
இந்த,
செல்போன் கொடி மலரே போல்...
அறிவியல் பூவும்,
முதிர் கன்னி!



குறிப்பு:
* இக்குறியிட்டது, சென்னை வானொலி
மூலமாக 11.12.2004-அன்று ஒலிபரப்புச்
செய்யப்பட்டது.
[கவிதைத் தலைப்பு, வானொலியினுடையது]
 





-- Willswords Tamil Twinkles
    [
http://willsindiastamil.blogspot.com]

1 comment:

  1. அறிவியல் வளர வளர, பூமிக்கு குந்தகம்தான். கவிதை நன்று

    ReplyDelete