Friday, 31 August 2012

இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-3)

                 < சொடுக்கு >



_____________________________________________________
Page-3:      
      
     இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-3)

     என் மனைவி, "அவசரத்திற்கு ஒரு டார்ச்லைட் கூட நம்மிடம் இல்லையே"  என்றதும், எனக்குள் ஒரு சிந்தனை உதித்தது;  அவளை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு எதிர்த்த வீட்டு நண்பரிடம் சென்று நடந்தவற்றைத் தெரிவித்ததும், நண்பர் டார்ச் லைட்டுடன் அவரும் துணைக்கு வருவதாக்க கூறினார். இருவரும் வீட்டை அடைந்த போது, சத்தம் அப்போதும் வந்து கொண்டிருந்தது. சுவிட்சை 'ஆன்' செய்து பின்கதவைத் திறக்க சத்தம் நின்றுவிட்டது. முன்புபோலவே தரை ஈரமேதும் இன்றி வரண்டிருந்தது. காம்ப்பவுண்டு சுவற்றின் சற்று இருண்டிருந்த (வெளிச்சம் பரவாத) மூலைப்பகுதியை நோக்கி ஒளி பாயும்படிக்கு நண்பர் டார்ச் லைட்டை திருப்பினார். வெளிச்சத்தில் அங்கே இருந்த தண்ணீர்த் தொட்டியின் மீது நண்பர் ஏறி நிற்க, அவரைத் தொடர்ந்து நானும் அதன்மீது தாவினேன். சுற்றுச் சுவருக்கு வெளியே நாற்புறமும் டார்ச் ஒளியைப் சுழலவிட்டு ஏதாவது கண்களுக்குப் புலப்படுகிறதா என்று உற்றுப் பார்த்தோம். சில்லென்று வீசிய காற்றின் ஊடே அசைந்துகொண்டிருந்த செடிகொடிகள்  மற்றும்  பனைமரங்கள்தான்  தெரிந்தன.

       நான் தொட்டியைவிட்டு சலிப்புடன் கீழே இறங்கினேன். என்னைத் தொடர்ந்து இறங்கிய நண்பர் கால்களை தரையில் பதித்தபோது அவரிடமிருந்த கைஒளிர்வின் (டார்ச்சு விளக்கின்) ஒளி  தற்செயலாக  தண்ணீர் தொட்டிக்குள் பரவ, "ஐயா ஒரு வினாடி  இங்கே  பாருங்கள்"  என்றார்.  உள்ளே பார்த்தேன். இப்போது எதனால் தண்ணீர் வாரி இறைப்பது போன்று சத்தம் வந்துகொண்டிருந்தது என்பதற்கான காரணம் புரிந்தது. அணிலொன்று நான்கரை அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிச் சுவற்றின் மேற்புறம் குறுக்கும் நெடுக்குமாய் பாய்ந்ததில், உள்ளே சுமார் அரை அடி உயர அளவிலிருந்த தண்ணீர்த் தேக்கத்திற்குள் தவறி விழுந்திருக்கின்றது. (எப்போது விழுந்ததோ தெரியவில்லை); நான் எப்போதெல்லாம் வீட்டின் பின்புறக் கதவை  மூடிவிட்டு வெளிபுறப்பகுதி டங்ஸ்டன் ஒளிர்வை (குண்டு மின்விளக்கை) அணைத்தேனோ அப்போ தெல்லாம் வெளிவிளக்கின் வெளிச்சமும் அணைவு (ஆப்) ஆக, ஆள் அரவமும் (sound) அடங்க, ஒவ்வொரு தடவையும் அணில் தொட்டியிலிருந்து வெளியேற முயன்றிருக்கின்றது. உண்மை என்னவென்பது  அறியாமல் அதனால் உண்டான சத்தத்தைக் கேட்டு, பேய்தான் தண்ணீர் தரையில் படாமல் நடுஇரவில் குளிக்கின்றதோ  என்று  பயந்துவிட்டோம்.

       நண்பர் லேசாக சிரித்தபடி, தொட்டியின் மூலையில்  இருந்த அணிலை விரட்ட ஆரம்பித்தார்.  அணிலோ, சுவற்றோடு ஒட்டியவாறு பதுங்கிக்கொண்டிருந்தது; ஒருவேளை நாம் இருவரும் இங்கே நின்றபடி இருக்க, அணில் பயந்துகொண்டு வெளியே வரத் தயங்குகின்றதோ என்னவோ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவர், என்னிடம் சுமார் ஒரு நான்கு அடி நீளத்துக்கு கொஞ்சம் தடிமனாக கம்போ, விறகோ எடுத்து வாருங்கள் என்றார். நானும் அவர் கேட்டபடி ஒரு தடித்த மூங்கிலை எடுத்துவந்து கொடுக்க அதை, அணில் சுலபமாக தண்ணீர்த் தொட்டியின் மேற்பகுதிக்கு ஏறிவர வசதியாக, தொட்டிக்குள் சற்று சாய்த்து வைத்தார். பின்னர் தொட்டியின் அடிப்பரப்பை ஒட்டி வெளியே அடைக்கப்பட்டிருந்த துண்டுத் துணியை பிடுங்கி தொட்டித் தண்ணீர் காலியாகும்படிச் செய்தார். நண்பர் கைஒளிர்வை (டார்ச் லைட்டை) காலையில் தருமாறு கொடுத்து,  வணக்கம் கூறி விடைப்பெற்றுச் செல்ல, அதன்பின்னர், எனக்கு இரவு உணவு...சத்தமின்றி  பசி  ஆறியது.

   
                                                        ***
குறிப்பு :

இக்கதையில் எதுவும் மூட நம்பிக்கையை ஏற்படுத்து வதற்காக பதிவு செய்யப்படவில்லை; அணில் சார்ந்த சம்பவம் உண்மையானது. கதையோட்டமும் பிற யாவும் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன.



      


< இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-3)

   < சொடுக்கு >
<மேலும் கதைகட்கு>

Labels:


Immediately

கூடுதலாக:
(Wills in Kavithai Chittu on other Web Blogs/Sites)

[The Hagley's]

Comment on the post "The most beautiful sunset I have ever seen...": (Newness)


Classic - படவரிசை தற்காலிக சேமிப்பில் பகிர்
Google+ இல் பகிரப்பட்டது. (இடுகையைக் காணவும்.)


      (Seen above)



Thursday, 30 August 2012

இரவில் குளிக்குமோ... பேய்? (பாகம்-2)

 Page-2         

     வீடுவந்ததும் மணியைப் பார்த்தேன் சரியாக 12.45. கால்கை கழுவி பசியுடன் சாப்பிட உட்கார்ந்த எனக்கு உணவு பரிமாறியபடியே என் மனைவி, "என்னங்க... இந்த வீட்டில் நமக்கு முன் குடியிருந்தவர் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம்; அவர் இறந்தபிறகு ஒரு வருடமாக யாரும் இங்கே குடிவரவில்லையாம்; இரவில் அவ்வப்போது வீட்டிற்குள் விநோதமாக சத்தங்கள் கேட்குமாம்; எதிர்த்தவீட்டு பாட்டி சொன்னார்கள்; பக்கத்தில் அரைப் பர்லாங் தூரத்தில் இடுகாடு ஒன்றும் உள்ளதாம்; அதனால் சீக்கிரமாக வேறு வீடு பாருங்கள்; அதுவரையிலும் இரவு எட்டு மணிக்கு முன்பாக எங்கிருந்தாலும் வீடு திரும்புங்கள்" என்றாள். நான் உடனே "சென்றவாரம் உன்னுடைய கல்லூரி ஆண்டுவிழாப் பேச்சுப் போட்டியில், 'பேய்களும் கடவுளைப் போன்றே மனிதர்களின் மூடநம்பிக்கையே!" என்ற தலைப்பில் உரையாற்றி முதல்பரிசைத் தட்டிக்கொண்டு வந்தாயே! நீயா பிசாசுகள் இருப்பதாக நம்பி இப்படிப் பேசுகிறாய்" என்று தைரியம் ஊட்டினேன்.


          அவளோ, "என்னங்க  செய்வது சிலநேரங்களில் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்டதாக  இருந்தாலும் சில நம்பிக்கைகள் நம்மைவிட்டு விலகவில்லையே. உதாரணத்திற்கு, பைபிளில் மனிதருள் பேதம் காணலாம் என்று சொல்லப்படவில்லையே; நீங்கள் கிருஸ்த்தவர்; ஒரு கிருஷ்தவப்  பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கலாம்; ஆனால் அப்படிச் செய்யவில்லை; நான் உங்கள் சாதியைச் சார்ந்தவள் என்பதால் என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள்; நீங்கள் எனக்குத் தாய்மாமனாக இருக்கலாம்; அப்படியானால் இந்துவாய் இருந்த என்னை உங்க அப்பா கிருஷ்த்தவளாக மாறும்படி செய்திருக்க வேண்டியதில்லையே! கிருஷ்தவ குடும்பங்களில் சாதி பாராமல் இந்துச் சடங்குகளை முற்றுமாக விலகி எத்தனைத் நல்லதுகள் நடக்கின்றன. கிருஷ்த்தவராக இருந்தாலும் ஒரு வகுப்பைச் சார்ந்தவன் இன்னொரு சாதிக்குள் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ அரிகாத உள்ளதே! சாதிப்பற்றும் வகுப்பு வெறியும் இந்துக்களைப் போலவே கிருஷ்தவரையும் விடவில்லையே!" என்று என்னை சாப்பிட விடாமல் பொறிந்து தள்ளினாள்.


          "அம்மா... தாயே..! நான் தாய்மாமன் என்கின்ற அடிப்படையில் என்னை நீ விரும்பித்தானே கல்யாணம் செய்துகொண்டாய்; நான் எதையோ கேட்க எதையோ குறிப்பிட்டு வழக்கம்போல் வம்புக்கிழுக்கின்றாய்; இனிமேல் உன்னை இராத்திரிகளில் தனியாக விட்டுச் செல்லமாட்டேன்" என்று போலியாக புன்சிரிப்புடன் என் மனைவியை நோக்கிக் கூறியவாறு, செவிக்கான அவளுடைய ஆல் இண்டியா ரேடியோ நேயர் விருப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வயிற்றுக்குள் உணவுக் கவளங்களை அனுப்ப முற்பட்டேன். அப்போது...


          "சல...சல...சலீர்..." யாரோ தண்ணீரை வாரி இறைத்தது போல் சத்தம்; உற்றுக் கேட்டேன்; இறைச்சலானது வீட்டின் பின்புறப் பகுதியிலிருந்து வந்தது. சாப்பிட முற்பட்டதை நிறுத்திவிட்டு வீட்டின் வெளிச் சுற்றுச் சுவர் (compound) பின்புறப்பகுதிக்கான சுவிட்சை 'ஆன்' செய்தேன்; வெளிச்சம் வெளிப்பட்டதும் சத்தம் நின்றது. கதவைத் திறந்து பார்த்தேன்; பின்புறப்பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டதற்கான ஈரமோ வேறு அறிகுறியோ கண்களுக்கு தென்படவில்லை.


         எனக்குப் பின்னே வந்த என் மனைவி, "வெய்யில் காலமல்லவா; ஒருவேளை புழுக்கமாக இருப்பதால் பக்கத்து வீட்டில் யாராவது குளித்திருக்கலாம்" என்று மெதுவாகக் கூறியவள் உடனே நிதானித்து அப்படியிருக்கக் வாய்ப்பு இல்லையே; ஏனென்றால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் இன்று மாலையில்தானே உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாகக் கூறிச் சென்றார்கள்; சரிவந்து சாப்பிடுங்கள்; வேறு எங்காவது இருந்து சப்தம் வந்திருக்கலாம்" என்றாள். பின்புறக் கதவைத் தாளிட்டு சுவிட்சை  'ஆப்'  செய்துவிட்டு  சாப்பிட  ஆரம்பித்தேன்.  


          "சல...சல...சல...சலீர்...சலீர்". மீண்டும் சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து மறுபடியும் சுவிட்சை 'ஆன்' செய்துவிட்டு கதவைத் திறக்க சத்தம் நின்றுவிட்டது. தண்ணீர் கொட்டியதற்கான அடையாளமே இல்லை. சுற்றுச் சுவரோடு பதிக்கப்பட்டிருந்த பின்புறக் கதவைத் திறந்து நிலவு வெளிச்சத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் பார்த்தேன்; தூரத்தில் இருந்த பனை மரங்களின் ஓலைகள் காற்று பலமாக வீச, 'பட...பட...பட...' எனற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன. எங்கோ ஆந்தை ஒன்று தன் குரலால் இரவைப் பயங்கரமாக்கிக் கொண்டிருந்தது. மற்றபடி நரியோ நாயோ கூட அங்கே உலாவுவதாகவோ, வந்து சென்றதாகவோ தெரியவில்லை. எனவே பழையபடி கதவுகளைத் தாளிட்டு சுவிட்சை 'ஆப்' செய்துவிட்டு என்னுடைய சாப்பிடும் கடமையைத் துவங்கினேன்.


          நான் சாப்பிட கையைத் தட்டில் வைத்ததும் மறுபடியும், "சல...சல...சல...சலீர்...சலீர்". பின்புற பகுதியில் தண்ணீரை வாரி இறைக்கின்றது போன்ற பேரிரைச்சல்; இந்தமுறை சத்தம் தெளிவாக் கேட்டது; யாரோ குளிப்பது போல் அல்லவா கேட்கின்றது. இரவில் பேய் குளிக்குமா? அதுவும் தண்ணீர் ஒருசொட்டுக் கூட தரையில் விழாமல்! இப்போது எனக்கு உள்ளூர உதறல் ஏற்பட்டது; என்றாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை; என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவளின் முகத்திலும் கலவரத்தின் சாயல் தெரிந்தது. ஆனாலும் நிதானத்துடன், "மணி 1.30 ஆகிவிட்டது; திடீரென்று கரெண்ட் கட் வந்துவிட்டால் என்னசெய்வது; அவசரத்திற்கு ஒரு டார்ச் லைட்கூட நம்மிடம் இல்லையே" என்றாள்.



இரவில் குளிக்குமோ... பேய்? (பாகம்-3)
                     நாளை தொடரும்.




      



< இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-2)

     < சொடுக்கு >

Go Page-1


மேலும் கதைகட்கு >
Labels:






கூடுதலாக:

Classic - படவரிசை தற்காலிக சேமிப்பில் பகிர்
Google+ இல் பகிரப்பட்டது. (இடுகையைக் காணவும்.)



      (Seen above)