குரங்கிலிருந்து பரிணமித்த, மனிதனின் கூன் முதுகு நிமிரும் காலம். கற்காலத்திலிருந்து சொற்காலத்துக்கு காலடி எடுத்து வைக்கின்றான் மனிதன். அண்ணன், தங்கை உறவுமுறை அரும்பிக் கொண்டிருந்த நேரம்.
அது சமயம் ஒர் நாள் காடு சென்று கரடி ஒன்றை விரட்டிவிட்டு தேனெடுத்துத் தன் அண்ணன் மகனுக்கும் தன் இளைய மகளுக்கும் கொடுப்பதற்காக தான் வசிக்கும் குகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், வீர மறவப் பெண்ணொருத்தி. திடீரென்று பின்புறப் புதர் ஒன்றிலிருந்து, பதுங்கிப் பாய்ந்தது சிங்கம் ஒன்று.
இளைய வயதினளாக இருந்தால் அந்த முரட்டுச் சிங்கத்தின் வாயை வெறும் கைகளாலேயே பிளந்து விட்டிருப்பாள். முதுமை அவளது இளமை வீரத்தைச் சற்று முடமாக்கிவிட்டிருந்த நிலைமையில்; இப்போது தான் கரடி ஒன்றை விரட்டித் தேனெடுத்து வந்தாள்; களைப்பு இன்னும் அவளை விட்டுக் கழலாத போதே, எதிர்பாராத விதமாய் பின்புறமிருந்து தாக்கிய சிங்கத்தை வீழ்த்த முடியாமல் திணறிப்போனாள். திடீரென்று கர்ஜனை; சிங்கம் இறந்து படுகின்றது; அடித்து வீழ்த்திய கர்ஜனையாளன் அவளின் அண்ணன் மகனே!
மருமகனின் மடியில் படுத்தபடி, அவன் தலை முடியைக் கோதி விடுகிறாள்; மரண வேதனையிலும், அவனை வாரி அணைத்து முத்தமிடுகிறாள். 'அம்மா' என்ற அலரலுடன் அருகில் வந்த தன் மகளை, மருமகன் கைகளில் ஒப்படைகின்றாள். மகளின் எதிர்காலம் பற்றிய அச்சம் அவளை விட்டு அகலுகின்றது. நிம்மதிப் பெருமூச்சு ஒன்றுடன் உடலின் இயக்கம் மெல்ல நின்றிட்டது. முதன்முதலாக ஓர் ஆண்மகன் குடும்பத்தலைவன் ஆகின்றான்.
அந்தப்பெண் இன்னும் பருவம் அடையாதவளாக இருந்தாள். அவளைக் காக்கும் பொறுப்பு பதினான்கு வயதே ஆன அந்தச் சிறுவனுடைய தாகின்றது. சிறு வயதிலேயே குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று காட்டின் உள்புகுந்து சிங்கங்களை வேட்டையாடிடும் வீரனாகின்றான் சிறுவன்.
அத்தை மகளோ அவனுக்கு வேண்டியதை குகைக்குள் இருந்து சமைத்துத் தரும் காதலியாகின்றாள். அதேசமயம் அவளுடைய தாயின் இளமை வீரம் அவளிடமும் குறைவில்லா திருந்ததால் எந்தக் ஆடவனையும் நேருக்கு நேர் நோக்கும் ஆற்றல் பெற்றிருந்தாள். துணைக்குப் புலிக்குட்டி ஒன்று அன்புத் தோழனாய் அவளுடன் அவ்வப்போது விளையாடிக் கொண்டிருந்தது. வேட்டைக்குச் சென்றுவரும் காதலன், தன் முகத்தை மட்டுமே தன் காதலி பார்க்க வேண்டும்; வேறு எந்த ஆடவனின் முகத்தையும் காணக் கூடாது. அப்படிப் பார்ப்பாளானால் அவளை யாராவது கடத்திச்சென்றிடும் நிலைமை உருவாகலாம். இதற்கு என்ன செய்ய? ஆண்மனம் முதன்முதலாக ஒருப் பெண்ணை நினைத்துக் கவலை கொள்கின்றது. காலப்போக்கில், 'அவனது சிந்தனையில், தான் இல்லாத நேரங்களில் அவள் தரையையே பார்த்திடும் தன்மையைப் பெற்றிட வேண்டும்' என்ற எண்ணம் உதயமாகின்றது; விளைவு கால்விரலிலே அணியும் மெட்டி உருவாகின்றது. அதைத் தொடர்ந்து, வேறு ஆடவன் அவள் பாராதபோதும் அவளுடைய கண்களைக் காணக் கூடாது. இதற்கு என்ன செய்ய? நெற்றியில் பொட்டு வைத்தான்; மூக்கிலும் காதுகளிலும் நகைகளைத் தொங்கவிட்டான் சிணுங்கும் கொலுசுகள் சித்திரப் பாவையின் கால்களைச் சிங்காரிக்கின்றன. ஆடுகின்ற காதணிகளையும் மின்மினி மூக்கணிகளையும் நெற்றிப் பொட்டையும் இயல்பாக நோக்கியப் பிற ஆடவர் அநேகமாக பெண்களின் விழிகளை நேருக்கு நேர் சந்திக்கும் தன்மையை மெல்ல மெல்ல மறந்தனர்! பிற ஆடவர்கள் தன்னைப் பார்பதற்குப் பதிலாக தன் அணிஅலங்காரங்களைக் கண்டு அதிசியப்பதை அறிந்த அந்தப் பெண்ணும் அணிகலன்களை அணிவது என்பதைத் தன்னுடைய அத்யாவசியப் பணியாக்கிக் கொண்டாள். வீரம் அவளை விட்டு விலகிப் போயிற்று. ஆடை, அணி அலங்காரம் அவளை ஆணுக்கு அடிமையாக்கிற்று. |
Tuesday, 5 June 2012
சிறுகதை - மெட்டியிலே துவங்கி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment