Sunday, 27 May 2012

எழில்! தமிழில் தள்ளாடும் மதுவோ?


                                       எ ழி ல்!
இளைய ராசாவின் இசையோ?
இசைக்கும் தேனீக்கள் மொழியோ?
மொழியில் 'சொல்' ஆடும் தமிழோ?
தமிழில் தள்ளாடும் மதுவோ?

மதுவைச் சுரந்தாடும் மலரோ?
மலரில் இதழாடும் கலையோ?
கலையைக் கவர்தாடும் முகிலோ?
முகிலைக் கண்டாடும் மயிலோ?

மயிலை நனைத்தாடும் மழையோ?
மழையில் மகிழ்ந்தாடும் வயலோ?
வயலில் வந்தாடும் மீனோ?
மீனைப் போலாடும் விழியோ?

விழியில் விழித்தாடும் கனவோ?
கனவில் நின்றாடும் நினைவோ?
நினைவில் நெளிந்தாடும் இரவோ?
இரவில் எழுந்தாடும் ஒளியோ?

ஒளியில் அசைந்தாடும் கொடியோ?
கொடியில் உருண்டாடும் பனியோ?
பனியில் குளிர்ந்தாடும் கனியோ?
கனியில் குழையாத சுளையோ?

சுளையைச் சுவைத்தாடும் கிளியோ?
கிளிகள் அமர்ந்தாடும் கீற்றோ?
கீற்றைக் கிழித்தாடும் காற்றோ?
காற்றும் காணாத நிலவோ?

நிலவைப் பார்த்தாடும் வனமோ?
வனத்தில் வண்டாடும் ஒலியோ?
ஒலியில் உணர்வாடும் தமிழோ? - எழில்,
தமிழைத் தந்தாடும் இடமே!

1 comment: