Wednesday, 18 July 2012

எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!


                       எடுக்கத்தேன் பூமேல் ஏறும்வண்(டு) அங்கே

அடுக்கும் இசையும் அதனால் அசைந்து

கொடுத்து மகிழும்பூ கொட்டும் சுவையும்

துடுக்கும் தமிழுக்கே சொந்தம்!


கமழும் மணத்தைக் கனியும் வனங்கள்

உமிழும் சுகத்தை உணர்ந்த மலர்கள்

அமிழ்தைப் பருக அமரும் அரியும்,

தமிழ்தான் சுவைஎனத்தாவும்!


பனிப்பட அசையும் பாசக் கொடியாய்

தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்

கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்

எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!


உயிரும் உறவும் உடலும் உடையும்

வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்

அணுவும் துணையும் அசைவும் இசையும்

தினம்என்வாய் தீண்டும் தமிழே!

No comments:

Post a Comment