Monday 21 January 2013

பெண்ணடிமை நிலைமாறும் இனத்தீமை* சாதி தாண்டு பெண்ணே!


வளம்கொழிக்க மணவாழ்க்கைஓர் வழியாம்என ஆண்களிப்பில்,
வலைப்போட்டு மான்போல் துள்ளும்மீன் ஒன்றைப் பிடித்து,
விலைப்பேசி வெள்ளித்தட்டில் நிச்சயிக்கும்அத் திருமணமோ,
புழுக்கோர்க்கும் புண்நிகழ்வே! சாதியோ முள்தூண்டில்,
துளைத்திடும் மதமோ துணைவியைக் கழுவேற்றிடும் கம்பம்!


மணம்கண்ட கன்னிதன் மானம்போய் சீரை, [சீர் வகையை]
தினம்எண்ணி தேய்வதற்கே சாதி!


ஊடி வளைஉடைய உள்ளம் முயங்கவில்லை!
தேடிக்கல் யாண சிறையுள் புகுந்துமனம்...
வாடிவர தட்சணைத்தீ வாட்டமாண் டிட்டதே!
கூடி மகிழாக் குயில்!

தரதட் சணைகேட்டு தாரத்தை தீய்க்கும்
திருடன் கணவனே அல்ல!

வரதட் சணைசாதி மாமிகள்முன் பாவம்
குரங்குகை பூமாலைப் பெண்.


பணம்பெருள் வெறியற்ற பண்பாள னைத்தேர்ந்து,
குணமுள்ளஅம் மானுடனைக் குவலயமாய் காதல்செய்!
இனத்தீமை* சாதிதாண்டி மணம்புரி; பெண்ணே!- கனி
வனம்போல் வாழ்வாய் தேசஒற்றுமையும் சேர்த்து!
 


* இனத் தீமை - பெண்ணடிமை, வரதட்சணை
  சீர்தனம் வன்கொடுமைகள்

No comments:

Post a Comment