(கவிதைச்சிட்டு, நவம்பர் 1990 மாத இதழில் பிரசுரமானது)
அவனும் அவளும்
- அருள் செல்வன்,
எண்.10, இரண்டாவது தெரு,
சோதி நகர், சிட்லபாக்கம், சென்னை-64.
இளந்தென்றல் மிதந்துவரும் இன்பமான நேரமது;
இளையநிலா எனைவருட! இயற்கையைநான் ரசித்திருந்தேன்;
எதிரினிலே கொடியொன்று இலையசைய மரம்ஒன்றின்மேல்,
கிளியிரண்டு கதைப்பேசி கிளுகிளுப்பில் தமைமறந்திருக்க...
களிப்புடனே பேசும்கிளி கனிமொழியைக் கேட்டீரோ? மொழிகளெல்லாம் அவையிடத்தில் முகிழ்ந்தேபின் செழித்தனவோ?
விழியிமைகள் மலரிதழ்போல் விரியஎனை வியப்புறத்தன் இனியகுரல் இசைத்தமிழில் இணையஅவள் கேட்டதும்நான்...
வஞ்சியே,நீ பேசுகிற வாய்மொழியின் மணிமொழிமுன் பஞ்சவர்ண கிளிஒலிகள் ஈடாமோ? - பரவசமாய்...
கொஞ்சியேநீ குலாவுகையில், குவலயத்தின் இனிமையெல்லாம்,
இஞ்சினடுமே! இரஞ்சிதமே!உன் எதிர்வரவே அஞ்சிடுமே!
விஞ்சியெனைப் புகழுகின்றீர் வெள்ளமென; அந்த கொஞ்சுகிளிக்கு எதிரினிலே குளிர்ந்திருக்கும் அழகு திங்களென அந்திச் செவ்வானம் தந்ததுபோல்...
செங்கனிகள் செழுமையினைக் காணீரோ என்றாள்;
என்நினைவை நானிழக்க எழிலாகிச் சிரிக்கும்உன் கன்னமது காட்டுகின்ற கனிவுப்பொங்கும் கவர்ச்சியிடம்,
மண்ணுலகு மலர்மரத்துக் கனிகளெல்லாம் தோற்றுதிரும்;
என்னவளே உண்மையிது; இணையில்லை உனக்கேதும்.
கன்னமிரண் டும்சிவக்க காதலுடன் நாணி-அவள் கண்ணசைவில் மெல்லஎனை அருகழைத்து - அங்கே,
அன்னமென அசையவரும் சோலைநதிச் சுழலுல் மின்னலென நீந்திவிளை யாடும் கயல்காணுங்களேன்!
எல்லையிலா இக்காட்சி எங்கேதான் தோன்றுமென முல்லைஒளி பல்மிளிர முகம்மலர்ந்து முறுவளித்தாள்;
கல்இமய மும்கரையும் கனிமொழித் தமிழுள்நான் சொல்லெடுத்துச் சரமாக்கித் தூதுவிட்டேன் 'பா'ஆக்கி!
வெள்ளிஅலை நீரினுளே விரைந்துவரும் அம்மீனும்...
விற்புருவம் மேலிருக்க விரியுமுன்றன் விழியினுள்ளே:
துள்ளிவிளை யாடபல காலமன்றோ கற்றிருக்கும்!
எள்ளளவும் ஐயமில்லை இனியவளே! என்றதும்நான்;
அன்புடையாள் என்முகத்தை அர்த்தமொடு நோக்கிநகைத்து,
என்னயிது? எதைச்சொன்னாலும் என்னிடமே வருகின்றீர்!
கன்னல்கவி கம்பன்தமிழ் கவிதைகள்சொட்டும் அமிழ்தமென என்னஉங்கள் கற்பனையோ... எனவுரைத்(து) எழுந்திட்டாள்!
|
No comments:
Post a Comment