சிட்டே சிறகு விரி!
கொட்டும் பனியுள் குதித்துவரும் கங்கையினை
தொட்டும் அலைஒலியில் தூங்காநம் காவிரியை
பட்டுநுரைப் பொங்க பவானிவரக் காண்பதற்கு
சிட்டே சிறகு விரி!
பொங்கலிடு திங்களிது புத்தாண்டில் வாழ்த்துகிறோம்
சென்றுலகம் சுற்றிவந்து எங்களிடம் பொங்குவிழா
எத்தனை வீடுகளில் இல்லையென்று கண்டுசொல்ல
சிட்டே சிறகு விரி!
பற்றிஎரி யும்வயிற்றை பாச முடன்தடவி
சட்டினியைத் தொட்டுதினம் சாதமென்று கூழ்களியை
பிட்டுண்டே நாளும் பிழைப்போர் பசிதீர
சிட்டே சிறகு விரி!
தொட்டுகரம் தாலியிட்டு தூயவளை விட்டுவர
தட்சணையே மஞ்சமாய் தாரவதம் செய்பவனை
கட்டி இழுத்துவந்து காலில் விழச்செய்ய
சிட்டே சிறகு விரி!