காலைவர மகிழ்ந்து கதிரவனைக் கண்டு,
சோலைவனம் துள்ள ஓடினாள் மானாக!
தாழம்மணம் தழைய பாடினாள் குயிலாக!
நீலமேகம் நீந்த, ஆடினாள் மயிலாக!
மாலைவர மேற்கில்,மயங்கி அந்திச்சிவப்பில்,
கோலம்போட கதிரவனும், குளுமைப்பெற்று நழுவ,
ஆலைப்புகை போன்று, அவனியை இருள்சூழ,
விண்ணிலா தங்கை, விலக்கிமுகில் திரையை,
புன்னகைஒளித் தெளிக்க, புவிநேசம் சுரப்பில்,
தண்ணீர் தழும்பும்குளத்தை, முகம்பார்எனத் தந்தாள்!
தாரணியை நோக்கிஓர் தாரகைப்பெண் கண்சிமிட்டி,
ஆறிடுவாய் மனம்;இன்றேன் அமைதியின்மை கொண்டாய்?
பார்எனைநீ பகலவனை நாளைகாண்பாய் என்றாள்!
பார்எனைநீ பகலவனை நாளைகாண்பாய் என்றாள்!
எங்கோஓர் சப்தம் எண்திசையும் அஞ்சச்செய்ய;
அங்கே ஊர்ந்துவந்த ஆகாயமுகில் தேரில்ஏறி;
தங்கமேனித் தாரகையும், தண்ணிலாவும், மறைய...
இடிஓசையைச் செய்ததுயார்? இடிபேரன் தகப்பன்தான்;
துடிமீனாய் துயர்கொண்டாள்; புவியோ, தந்தைகோபத்தால்;
நெடியதொரு அவன்மூச்சு, நீங்காகொடும் புயலாக...
நெடியதொரு அவன்மூச்சு, நீங்காகொடும் புயலாக...
தன்பெண்ணின் தவறென்ன எனவானம்தன் கணவன்முன்,
கண்ணீரை மழையாய், கனிந்துருகிப் பெய்தாள்;
தண்ணீரால் வியர்வையென, தன்மகளை நனைத்தாள்.
கண்ணான மனைவிபுலம்ப, கவலையுற்ற புவியின்தகப்பன்,
மண்மகளின் காதலுக்கு, வாழ்த்துச்சொல்லி அகன்றான்;
விண்தாயும் மென்புவியை, அரவணைத்துக் குளிர்ந்தாள்.
மண்மகளின் காதலுக்கு, வாழ்த்துச்சொல்லி அகன்றான்;
விண்தாயும் மென்புவியை, அரவணைத்துக் குளிர்ந்தாள்.
வெண்ணிலா புன்முறுவலுடன் மீண்டும்அங்கே ஒளிர...
விண்மீன்கள் கண்ணசைத்து, மெளனமாக களைய...
மண்பெண்தன் கவலைநீங்கி, மணமகள் போலானாள்.